Friday, 8 Aug 2008

2008/08/08 Lenavin Payna Katturai

shanghai.jpgசீனம் சென்று வந்தேன்

இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

ஷாங்காயின் யுவான் தோட்டத்தைக் காண நாங்கள் ஒதுக்கிய நேரம் மிகக் குறைவு. ஓர் இயற்கை விரும்பியாக இருந்ததால் புறப்பட மனமின்றிப் புறப்பட்டேன். ஒருநாள் அல்ல, இருதினங்கள் ஓதுக்கியிருக்க வேண்டும். உணவுகளைக் கொண்டு வந்து ஒவ்வொரு பகுதியிலும் சிறு முகாமிட்டு ஆற அமர இரசித்துப் பார்க்க வேண்டிய தோட்டமிது.

ஆனால் நானே இப்படி அவதி அவதியாய்… சரி, என்ன செய்வது? நம் வாழ்க்கைச் சூழல் அப்படி என்று சமாதானம் செய்துகொண்டேன்.

ஷாங்காயின் முக்கியச் சுற்றுலாக்கள் என்று எடுத்துக் கொண்டால் இவற்றைப் பட்டியலில் அடக்க முடியாது.

ஷாங்காய் சைட்சீயிங் பஸ் சென்டர் எனப்படும் இடத்திலிருந்து மட்டும் தினமும் 253 இடங்களுக்கு 108 வகையான பயணத் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. தேர்ந்தெடுத்துச் சரியான இரசனையுள்ள இடத்திற்குச் செல்வதற்குள் தலை சுற்றிவிடும்.

இந்த மையம் தினமும் 400 பேருந்துகளை இயக்குகின்றன. எங்கிருந்துதான் வருமோ தெரியாது. மிகச் சரியாக ஒரு சதுர அரங்கை ஒட்டிய பாதையில் வந்து நிற்கின்றன. சில பேருந்துகளில் நான்கு பேர்களே ஏறுகிறார்கள். சில பேருந்துகளோ நிரம்பி வழிகின்றன. இதற்காக நிறுத்துவதற்கெல்லாம் அனுமதி இல்லை.

36 இருக்கைகள் கொண்ட பேருந்து என்றால் ‘சிக்’ என்ற உடையணிந்த ஒரு மஞ்சள் தேவதை பேருந்தின் நுழைவாயிலில் நின்று கொண்டு கையில் உள்ள கருவியை அழுத்துகிறது. 36 ஆனதும் அந்தக் கருவியைப் பார்த்து, இனி உங்களுக்கு அடுத்த பேருந்து என அறிவிக்கிறது.

இதை நம் முகம் கோணாதபடி சொல்லும் அழகே அழகு.

பேருந்துகள் குறித்த நேரத்திற்கு மிகச் சரியாக வருகின்றன. இந்தத் துல்லியம் மிக வியப்பாக இருக்கிறது. சீனர்கள் கூட நேர உணர்வில் இவ்வளவு துல்லியமாக ஆகிவிட்டார்கள்.

பேருந்தில் கூடுதல் நபர்களை ஏற்றுவதில்லை என்றேன் அல்லவா. இதுபற்றி ஒன்று சொல்ல வேண்டும். சீனப் பேருந்துகளில் பிரேக்குள் மிக அட்டகாசமாகப் பிடிக்கின்றன. ஒரு சடன் பிரேக் போட்டால் இருக்கையில் இருப்பவர் முன் இருக்கையில் போய் மூக்கில் இடித்துக் கொள்ள நேரிடுகிறது. நின்றால் என்னாவது? தூக்கி எறிந்து உருளச் செய்துவிடும் என்று நினைக்கிறேன்.

பேருந்துகள் மகாச் சுத்தம். புத்தம்புது இருக்கைகள். கால்களுக்கடியில் தூசு தும்பு குப்பைகளைப் பார்க்க முடியவில்லை.

தினமும் குறைந்து 5000 பேர் பயணிக்கிறார்களாம். செட் ஏ, செட் பி என்று ஆரம்பித்து அது பாடு செட் வி வரை போகிறது.

ஒரு நாள் சுற்றுலாவுக்குக் குறைந்தபட்டசம் 70 சீன ரூபாய்கள். அதிகபட்சம் 325 சீன ரூபாய்கள்.

இரண்டு நாள் பயணத்திற்கும் ஒரு நாள் பயணத்திற்கும் இரண்டு மடங்கு வித்தியாசம் இல்லை. மாறாக 130 ரூபாய்க்குக்கூட இரு தினச் சுற்றுலாத் திட்டங்கள் கிடைக்கின்றன.

போகிற இடத்தில் தங்க அறை வேண்டுமானால், டிக்கெட் விற்கும் இடத்திற்கு அருகிலேயே ஓட்டல் சார்ந்த முகவர்கள் இருக்கிறார்கள்.

தங்கிவிட்டுக் திரும்ப நினைக்கிறவர்கள் டிக்கெட் வாங்குமிடத்தில் சொல்லிவிட வேண்டுமாம். நான் ஒரு நாள் தங்கிவிட்டு வருகிறேன் என்ற உடனே அதற்கு ஏற்றமாதிரி டிக்கெட் தருகிறார்கள்.

சற்றுத் தெளிவாகச் சொல்லட்டுமா? இரண்டு நாள் பயணம் போகிறோம் என்றால் ஒருநாள் பயணம் செய்துவிட்டு இரவு ஓர் அறை எடுத்து நாள் முழுக்கத் தங்கிவிட்டு, மறுநாள் இரவு வரும் அடுத்த பேருந்தைப் பிடித்து பயணத்தைத் தொடரலாம்.

ஆனால் டிக்கெட் எடுக்கும்போதே சொல்லிவிட வேண்டும். இல்லாவிட்டால் மறுநாள் வரும் பேருந்தில் ஏற்றிக் கொள்ளமாட்டார்கள்.

பயணிகள் இரு தின மூன்று தினப் பயணங்களில் பிடித்த இடங்களில் தங்கிவிடலாம்; அடுத்தநாள் பேருந்தைப் பிடித்து ஊர் திரும்பலாம் என்கிற ஏற்பாடு எனக்கு மிகப் பிடித்திருந்தது.

சில இடங்களுக்குச் செல்கிறோம். புறப்படவே மனம் இராது. ஆனாலும் வந்த பேருந்தில் பயணம் தொடர்ந்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம்.

ஷாங்காய் சுற்றுலா அமைப்பு இதற்கு விதிவிலக்கு.

ஷாங்காய் சைட் சீயிங் பஸ் சென்டர் தர முத்திரையான ஐ.எஸ்.ஓ.9001 இன் அங்கீகாரத்தைப் பெற்றது என்று பெருமையுடன் அறிவிக்கிறார்கள் 9001 என்ன 90001 கூட வழங்கலாம். அட்டகாசமான சேவை. ஷாங்காய் முனிசிபாலிட்டிதான் இதை நடத்துகிறது.

இது 1998இல் ஆரம்பிக்கப் பட்டதாம். 10ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை அண்மையில்தான் பிரமாதப்படுத்தியிருக்கிறார்க்ள.

டிக்கெட் எடுக்க முன்பதிவு தேவையில்லை; வாருங்கள்; முடிவு செய்யுங்கள் புறப்பட்டுப் போங்கள் என்று துணிவாக அறிவிக்கிறார்கள்.

எத்துணைப் பேர் வந்தாலும் சமாளிக்கக் கூடுதல் பேருந்துகளையும் ஆள்களையும் வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

சைட் சீயிங் ஷாங்காய் பஸ் சென்டர் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. கொசகொச என்று சீன எழுத்துகள், வரவேற்பறையில் உள்ள பெண்கள் சிவப்பு நிற கோட் அணிந்து காட்சி அளிக்கிறார்கள். சீன மொழி மட்டும் பேசிப் பாடாய்ப்படுத்துவதுதான் பெரிய சங்கடமாக இருக்கிறது.

புரிய வைக்கும் முயற்சி பலன் தராதுபோல் இருக்கிறது. ஆங்கில வெளியீடுகளைக் கையில் வாங்கி பேனாவால் டிக் அடித்து இந்த டிக்கெட் கொடுங்கள் என்று கேட்க வேண்டியிருக்கிறது.

உலக அளவில் உல்லாசப் பயணிகளைக் கவர்ந்து இழுக்க நினைக்கும் இவர்கள் ஆங்கிலம் பேசத் தெரிந்த பெண் ஒருவரையேனும் ஏன் பணியில் அமர்த்தக்கூடாது.

உள்ளூர் நண்பர்கள் இல்லாவிடில் சீனாவில் எல்லாவற்றிற்குமே பெரிய போராட்டம்தான். உள்ளே ஏகப்பட்ட உணவுக்கடைகள் இருக்கின்றன.

எதுவும் சாப்பிடப் பிடிக்காமல் மாம்பழமும் சப்போட்டாவும் கலந்த பழக்கலவை கேட்டு (என்ன இரசனையோ!) வாங்கிக்கொண்டேன்.

பெரிய அளவிலான காகித டம்ளரில் கொடுக்கிறார்கள். ருசி இல்லை. ஐஸ் கட்டியை வேறு சீய்த்து (?) சர்க்கரைத் தூள் போல் ஆக்கிக் கலக்கித் தருகிறார்கள். அதிகப்படியான ஐஸ் பழக்கலவையின் ருசியைக் கெடுக்கிறது. பழங்களும் நம்மூர் மாம்பழத்தின், நம்மூர் சப்போட்டாவின் ருசிபோல் இல்லை. ஏண்டா வாங்கினோம் என்கிற நிலைமைதான். ஆனால் நாற்றம் பிடித்த இவர்களது உணவு வகைகளுக்கு இந்தப் பழக்கலவையே எவ்வளவோ பரவாயில்லை.

பழக்கலவை வாங்கப்போன நான் என் கைப்பையை அப்படியே என் இருக்கையில் விட்டுவிட ஏழெட்டு நிமிடம் கழித்து வந்து பார்த்தால் அங்கேயே அப்படியே இருக்கிறது.

இங்கு எவரும் எதையும் தொடமாட்டார்கள்?

Lost and found பகுதியில் எடுத்துக் கொண்டுபோய்க் கொடுக்கமாட்டார்களா?

வெடிகுண்டு கலாசாரம் இங்கு இல்லாததால் கைவிடப்பட்ட உடைமைகளைக் கண்டு எவரும் பீதி அடைவது இல்லை.

குழந்தையை அழைத்துக் கொண்டு கழிவறை வரை செல்லும் தாய்மார்கள் கூடத் தங்கள் பெட்டி பைகளை உடன் எடுத்துச் செல்லாமல் உள்ளே போய்விட்டு சாவகாசமாகத் தங்கள் இருக்கைகளுக்குத் திரும்பும் இயல்பு எனக்கு வியப்பைத் தந்தது.

இங்கு பிறர் உடைமைகளை எவருமே திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்களா என்ன?

அவ்வளவு வளமையா? அல்லது வறுமை நிலவினாலும் அதிலும் நேர்மையா?

(தொடரும்)

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

 2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Related Posts Title


Leave a Reply