Friday, 25 Jul 2008

2008/07/25 Lenavin Payna Katturai

shanghai1.jpgசீனம் சென்று வந்தேன்

சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

சீன கம்யூனிஸ்ட் அரசு முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான வடமேற்குப் பகுதியைக் கண்டு கொள்வதில்லை; அப் பகுதியின் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டுவது இல்லை என்பது அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்தது.

சீனர்களுக்கும் மதப் பாகுபாடு உண்டு என்பது உங்களுக்குச் செய்தியாக இருக்கும் என எண்ணுகிறேன்.

அமெரிக்காவில் நியூயார்க் நகரம் சற்றுத் தரக் குறைவாக இருக்கும். சாலைகள் சீராக இரா. பள்ளங்கள் உண்டு. சாலைகளில் குப்பைகள் சகஜம். சட்டம் ஓழுங்கோ மிகவும் சுமார்.

ஏன் தெரியுமா? இங்கே கறுப்பினத்தவர் அதிகமாக இருப்பதுதான் என்கிறார்கள் நம்மவர்களுள் சிலர்.

உலக நாடுகள் பலவும் ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்திருப்பது புதிய விஷயமல்ல என்பதற்காகவே இந்த அமெரிக்க உதாரணம்.

சட்டம், அணுகுமுறைகள் எல்லோருக்கும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும். அரபு நாடுகளில் அந்நாட்டவர் சிறு குற்றங்கள் செய்தால் தப்பித்துவிடவும், சிறு தண்டனை பெறவும் வாய்ப்பு உண்டு. ஆனால் வெளிநாட்டவர் செய்தால் பின்னிவிடுவார்கள் பின்னி.

இந்தப் பாசாங்கு கம்யூனிஸ்ட் நாட்டில் இருப்பதுதான் சற்றே யோசிக்க வேண்டிய விஷயம்.

‘பொது’ உடைமை பற்றிப் பேசும் நாடு இந்தப் போலி அணுகுமுறைகளை ஏன் கையாள வேண்டும்?

யாரையோ தண்டிப்பதாக எண்ணிக்கொண்டு தங்கள் நாட்டையே அல்லவா தண்டிக்கிறது சீனா?

மேற்கு, வடமேற்குச் சீனாவில் உணவு உற்பத்தியோ, விவசாய அக்கறையோ சொல்லிக் கொள்ளத் தக்க அளவில் இல்லை.

நீர்வளம் குறைவு என்று வேண்டுமானால் சீன அரசு சால்ஜாப்பு சொல்லலாம்.

சீன அரசு மீது உலக நாடுகளும், ஏன் சீனர்களுமே ஒரு புதுக் குற்றச்காட்டை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

அது, பீஜிங் ஒலிம்பிக்கிற்காக 1300 மருந்து மூலப் பொருள் உற்பத்தித் தொழிற்சாலைகளை மூடிவிட்டார்கள் என்பதே அந்தக் குற்றச்சாட்டு.

இது குறித்து விசாரிக்க மை யூன் (mai yun) என்கிற சீனரைத் தொடர்பு கொண்டு கிளறினேன்.

பத்திரிகையாளர் என்றதுமே பேசப் பயப்பட்டார். பெயரை வேண்டுமானால் மாற்றிப் போட்டுக் கொள்ளுங்கள் என்றார். ”உங்களோடு படம் ஒன்று எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றதுமே பாம்பை மிதித்தவர் போல் அலறினார். ”சரி வேண்டாம் விஷயத்தை மட்டும் சொல்லுங்கள்” என்றதும்தான் இறுகிப் போன உதடுகளைத் திறந்தார்.

”நான் மெட்டார்பின் என்ற மருந்து மூலப் பொருளைத் தயாரித்து வருகிறேன். பீஜிங்கிற்கு அருகே என் தொழிற்சாலை இருக்கிறது. இதனை மூடச் சொல்லிவிட்டது சீன அரசு.”

”காரணம்?”

”பீஜிங் ஒலிம்பிக்தான்.”

”ஒலிம்பிக்கிற்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம்?”

”இருக்கே. மெட்டார்பின் பல மாத்திரை மருந்துகளைத் தயாரிக்க உதவும் மூலப்பொருள். இதை உற்பத்தி செய்கிற இடம் சும்மா சொல்லக்கூடாது. காற்று அதிகமாகவே மாசுபடும்.”

”சரி.”

”பீஜிங் ஒலிம்பிக்கின்போது உலகெங்கிலும் இருந்து விளையாட்டு வீரர்களும், பார்வையாளர்களும் ஏகப்பட்ட பேர் வருவார்கள் அல்லவா? அந்த நேரம் இப்படிப்பட்ட தொழிற்சாலைகளால் காற்று மாசுபட்டால் உலக நாடுகளிடையே தனக்கு அவப்பெயர் ஏற்படும் என்று அரசு நினைக்கிறது.”

”அதற்காக?”

”அதற்காக என்னைப் போல் 1300 தொழிற்சாலை வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து உடனே மூடச் சொல்லிவிட்டது.”

”அடப் பாவமே! நஷ்ட ஈடு தருமா?”

”நாங்களெல்லாம் சேர்ந்து கோரியிருக்கிறோம். ஆனால் கிடைக்கும் என்று தோன்றவில்லை.”

”நீங்கள் சரி. முதலாளிகள். தாங்குவீர்கள். தொழிலாளிகள் என்ன செய்வார்கள் வருமானத்திற்கு?”

”அது எங்கள் தலைவலி என்று அரசு சொல்லிவிட்டது.”

”ஒலிம்பிக் முடிந்து தொழிற்சாலைகளைத் திறக்கும்போது இந்தத் தொழிலாளர்கள் வேறு எங்கேனும் போய்விட்டால்?”

”கரெக்ட். இதுதான் எங்கள் பிரதானக் கவலை. இடம்பெயர்ந்துவிட்டாலோ, நல்ல சம்பளம் வாங்கிப் பழகிவிட்டாலோ எங்கள் பக்கம் திரும்பிப் பார்க்கமாட்டார்கள்.”

”அடடே!”

மை யூன் பேசிய விஷயங்கள் எல்லாம் கனமான சோகங்கள். ஆனால் முகத்தில் எவ்வித வருத்தமும் காட்டாமல் பேசினார். சமயங்களில் சிறுபுன்னகையும்கூட வெளிப்படுத்தினார். சீனர்கள் ஒரு மோசமான சோதனைகளைக்கூட எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம். எதற்கும் அசராத உள்ளத்தவர்களோ என்னவோ! எவ்வளவு பெரிய மூடலை எவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொண்டுவிட்டார் என்று எண்ணவே வியப்பாக இருந்தது.

”இன்னொன்றும் சொல்ல வேண்டும். சீனாவில் மின்சாரப் பஞ்சம் நிலவுகிறது. எங்கே ஒலிம்பிக் நேரத்தில் மின்பற்றாக்குறை வந்துவிடுமோ என்று அஞ்சியும் தொழிற்சாலைகளை மூடச் சொல்கிறார்கள்.”

மை யூன் மேலும் ஒரு விஷயத்தை அவராகவே ஆரம்பித்துப் பேசினார். இந்த விஷயம் நம்மைப் பற்றியது. இன்னும் சொல்லப் போனால் நம்மைப் பாதிக்கக்கூடியது என்றும் சொல்லலாம். 1300 மருந்து மூலப்பொருள் தொழிற்சாலைகளை சீனாவில் மூடியிருக்கிறார்கள் அல்லவா, இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது இந்தியாதானாம்.

”எப்படி?” என்றேன்.

”இந்தியாவில் உள்ள பல மருந்து நிறுவனங்களுக்குப் மூலப்பொருள்களை வழங்குவது எங்கள் நாடுதான்.”

”அப்படியா? எனக்கு இது புதுச் செய்தியாக இருக்கிறதே!”

”சொல்லப்போனால் நான் தயாரிக்கும் மெட்டார்பினில் 30 சதவிகிதத்தை இந்தியாவுக்குத்தான் அனுப்புகிறேன்.”

”ஓ!”

”இப்போது நிறுத்திவிட்டேன். ஆனால் இந்திய நிறுவனங்கள் பல என்னை நம்பிக் கொண்டிருப்பதால் பீஜிங் அல்லாத பிற நகரங்களை ஒட்டிய தொழிற்சாலைகளிலிருந்து விலைக்கு வாங்கி அனுப்பச் சொல்லுகின்றன இந்திய நிறுவனங்கள்.”

”உதவி செய்தீர்களா?” என் குரலில் அக்கறை தோய்த்து இக்கேள்வியைக் கேட்டேன்.

”பல மடங்கு அதிக விலை சொல்கிறார்கள்.”

”ஏன் அப்படி?”

”டிமாண்ட் நேரத்தில் சம்பாதித்துவிட வேண்டும் என்கிற கெட்ட நோக்கம்தான்.”

”இதற்கு இந்திய நிறுவனங்கள் உடன்படுமா?”

”வேறு வழியில்லை. இந்திய நிறுவனங்கள் சம்மதித்துதான் ஆகவேண்டும். மருந்துத் தயாரிப்பை நிறுத்தமுடியாதே!”

”ஆமாம். அப்படியானால் இந்தியாவில் மருந்துகளின் விலை உயர வாய்ப்பு இருக்கிறது என்கிறீர்கள்.”

”நிச்சயமாக!”

”பீஜிங் ஒலிம்பிக் முடிந்ததும் மூடப்பட்ட தொழிற்சாலைகளைத் திறந்துவிடுவார்கள். பிறகு விலை குறையுமல்லவா?”

”ஒரு போதும் குறையாது. விலை உயர்வை அப்படியே பாரமரிக்கவே பாடுபடுவார்கள்.”

இந்திய மருந்துத் துறையை நோக்கிச் சீனாவிலிருந்து ஒரு பெரிய சூறாவளி புறப்படுவதைப் போல் எனக்குக் கற்பனை செய்யத் தோன்றியது.

(தொடரும்)

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Related Posts Title


Leave a Reply