Tuesday, 22 Jul 2008

UPA govt., win the Trust of vote

நம்பிக்கை வாக்கெடுப்பு: மன்மோகன் சிங்கிற்கு மாலை!:
கட்சி மாறிகளால் காப்பாற்றப்பட்ட அரசு!

டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 275 வாக்குகளும், எதிராக 256 வாக்குகளும் பதிவாகின. 10 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை.

அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட இடதுசாரிகளின் அரசை கவிழ்க்கும் எண்ணம் ஈடேறவில்லை.

மத்திய அரசுக்கு ஆதரவு தர பணம் கொடுக்கப்பட்டது என்று 3 பா.ஜ.க. எம்.பி., க்கள் அந்தப் பணத்துடன் நாடாளுமன்றத்திற்கு வந்து குற்றம் கூறி பரபரப்பை ஏற்படுத்தினாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு அமைதியாக நடந்து முடிந்தது.

பா.ஜ.க. எம்.பி., க்களின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சபாநாயகர் கூறியதும் நம்பிக்கை வாக்கெடுப்பு நல்லபடியாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டன.

முதலில் மின்னனு வாக்கெடுப்பிற்கு சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உத்தரவிட்டார். இதில் அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின.

பின்னர் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டு வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. சுமார் ஒருமணி நேரத்திற்குப் பிறகு முடிவை அறிவித்தார் சபாநாயகர்.

அரசுக்கு ஆதரவாக 275 வாக்குகளும், எதிராக 256 வாக்குகளும் பதிவாகின. 10 எம்.பி.க்கள் வாக்களிக்க வரவில்லை.

இதனால் அரசு வெற்றி பெற்றதாக அறிவித்த சபாநாயகர், பின்னர் மறு தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார்.

இந்தவெற்றி குறித்து பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிடுகையில், ”இந்த வெற்றி திருப்தியளிக்கும் வெற்றியாகும். உலக அரங்கில் தனக்குரிய இடத்தைப் பெற இந்தியா தயார் என்ற மிக முக்கியமாக செய்தியை இந்த வெற்றி உலகிற்கு காட்டியுள்ளது” என்றார்.

ராகுல்காந்தி கூறுகையில், ”இத்தகைய வெற்றிபெற்ற பிரதமர் பற்றி பெருமை கொள்கிறேன். போட்டியில் வென்றோமா தோற்றோமா என்பது பற்றி சிந்திக்காமல் இந்தியாவிற்கு உகந்தது எது என்றுதான் நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

எதிர்க்கட்சி த்தலைவரும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே. அத்வானி கூறுகையில், ”எண்ணிக்கை அடிப்படையில் அரசு வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இது நேர்மையான வெற்றி அல்ல. இந்த வெற்றியை அடைய பணபலம் பயன்படுகிறது என்ற சந்தேகம் மட்டும்தான் முன்னர் இருந்தது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அதை உறுதிப்படுத்தியுள்ளது” என்றார்.

பா.ஜ.க கட்சியில் இருந்து 7 பேர் கட்சி மாறி வாக்களித்துள்ளதாகவும் அத்வானி கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இருவர் கட்சி மாறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆக, இந்த அரசு கட்சி மாறிகளால் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts Title


Leave a Reply