Friday, 18 Jul 2008

2008/07/18 Lenavin Payna Katturai

shanghai.jpgசீனம் சென்று வந்தேன்

முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

சீனாவில் நீரிரைக்கும் இயந்திரத்தைக்கூட விவசாயிகளுக்கு அரசு இலவசமாகத் தருகிறது என்ற செய்தி எனக்கு வியப்பைத் தந்தது.

”இதென்ன பிரமாதம்? சீன அரசு நிலம் இல்லாத விவசாயிகளுக்கு நிலமே கொடுக்கிறது” செந்தில்குமார்.

”அடேங்கப்பா எவ்வளவு நிலம்?”

”அரை ஏக்கர், ஒரு குடும்பத்திற்கு.”

”பரவாயில்லையே!”

”நிலம் கொடுப்பதன் மூலம் பல விஷயங்களை ஒரே நேரத்தில் சாதிக்கிறது.”

”புரிகிறது. இருந்தாலும் நீங்கள் மேலே சொல்லுங்கள்.”

”சீனாவில் எவரும் சோம்பேறிகளாக வாழமுடியாது. சீனர்கள் இதை விரும்புவது இல்லை. உழைக்கும் உணர்வு சீனர்களின் இரத்தத்தோடு கலந்த விஷயம். எவனும் சும்மா இருக்கமாட்டான் இங்கு. ஏதாவது செய்துகிட்டே இருப்பான். வயசானவங்களுக்கே இந்த மனநிலை இருக்கும்னா பாத்துக்குங்களேன்.”

”சீனர்களிடம் நான் மிகவும் வியக்கும் விஷயம் இதுதான். எப்படி சார் ஓர் இனத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பரவலா இப்படி ஒரு குணம் பதிய முடியும்? புரியாத புதிர் சார்!”

”அதென்னவோ தெரியலை. இந்த இனமே இப்படி உழைக்கும் வர்க்கமா இருக்கு. மத்தவனை அண்டிப்பிழைப்பதையும் சுரண்டிப் பிழைப்பதையும் அவமரியாதையா நினைக்கிறவங்க சீனங்க.”

”இந்த ஒரு குணமே இந்த இனத்தை உயர்த்திப் பிடிக்கிறது.”

”உண்மைதான். வெற்று நிலங்கள் விளைநிலங்களாக்கப்படும் நன்மையும், குடியமர்வைப் பரவலாகவும் நிரவலாகவும் ஆக்குகிறது இந்த இலவச நிலம் வழங்கும் திட்டம். வேலைவாய்ப்பு வசதிகளை உருவாக்கவும் இந்தத் திட்டம் உதவுகிறது.”

”நல்லாச் சொன்னீங்க செந்தில் சார். உண்மைதான்.”

”அரசு இன்னும் என்ன தரும்?”

”விதையைக் கூடத் தந்துவிடும்.”

சட்டென்று நினைவுக்கு வந்தவனாய், ”நம்ம ஊரில கூட கிட்டத்தட்ட இந்த முறை இருக்கே செந்தில்குமார்.”

”எப்படிச் சொல்றீங்க? புரியலை.”

”கரும்பு விவசாயத்தை எடுத்துக்கொள்வோம். கரும்பு ஆலைகளே அனைத்தையும் தந்துவிடுகின்றன. வளர்க்க மட்டும்தான் நம் ஆள்கள். சோயாப் பயிரைத் தமிழகத்தில் பரப்ப சக்தி சோயாஸ் பெருமுயற்சி எடுத்துக்கொண்ட போதும் இப்படித்தான் சக்தி நிறுவனமே எல்லாத்தையும் தரும். விளைவிச்சுக் கொடுத்தா விலைக்கும் எடுத்துக்கும்.”

”ஓரளவுதான் ஏத்துக்குவேன். நிலம், தண்ணீர், மோட்டார் இவையெல்லாம் விவசாயிகளின் பஙகளிப்புகள். இங்கு அப்படி இல்லை. எல்லாமே அரசுதான். ஒரு கைப்பிடி விதை வெளியில் போனாலும் செய்தி மேலே போய்விடும்.”

”சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூட முடியாதா?”

”முன்பே சொன்னேனே! எடுத்துக்கலாம். ஆனால் அது மதிப்பிடப்பட்டு, தொகை கழிக்கப்பட்டுவிடும்.”

”சொந்த உபயோகத்திற்கு என்று சொல்லி, வெளிமார்க்கெட்டில் விற்றுவிட்டால்?”

”தப்பா எடுத்துக்காதீங்க. இந்த மாதிரியான கெட்ட எண்ணமெல்லாம் சீனர்களுக்குத் தோன்றவே தோன்றாது. சீனர்கள் மிக நல்லவர்கள்; நேர்மையானவர்கள்.”

”சீனாவில் இப்படி எல்லோருமே அரசு நிலங்களை உழுது பிழைப்பவர்கள்தானா?”

”அப்படியில்லை. செல்வந்தர்களும் நிலச்சுவான்தாரர்களும் உண்டு. ஆனால் இவர்களின் ஆதிக்கத்தைக் கட்டிற்குள் வைத்திருக்கிறது அரசு.”

”இப்படித் தனியாரின் கொள்ளையடிக்கும் எண்ணம்தான் நம் நாட்டில் விலைவாசி ஏற்றம் கடுமையாக உயரக் காரணமாக இருக்கிறது.”

”அது பெரிய சப்ஜெக்ட். இதில் நான் வல்லவனில்லை.”

”இடைத்தரகர்கள், சில்லறை வியாபாரிகள், மொத்த வியாபாரிகள் ஆகியவை இங்கும் உண்டு. ஆனால் எல்லாம் கட்டுக்குள் இருக்கிறது.”

”எப்படி இது சாத்தியம்?”

”மக்கள். அரசின் எண்ணங்களை மீறிச் சிந்திக்காதவர்கள்.”

”இதை ஒருவித அடிமைத்தனம் என்றே எண்ண வேண்டியிருக்கிறது.”

”அப்படியில்லை. மனசாட்சிக்குப் பயந்த, சட்டத்தை மதிக்கிற, நல்ல குடிமக்களைக் கொண்ட நாடு என்றும் சொல்லலாம்.”

”மெல்ல மெல்ல நீங்கள் சீன மக்களின் இரசிகராகவே ஆகிவிட்டீர்கள்.”

”அப்படி இல்லை. இந்த மக்களின் அணுகுமுறை பல விஷயங்களில் பாராட்டும்படி இருக்கிறது.”

”அரை ஏக்கர் நிலம் கவனிக்கப்படாமல் விடுபட்டுவிட்டால்?”

”அந்த நிலம் பறிக்கப்பட்டு வேறு ஒருவருக்குச் கொடுக்கப்படும்.”

”எனவே இந்த மண் எவருக்கும் நிரந்தரமாகச் சொந்தமில்லை என்று சொல்லுங்கள்.”

”விவசாயத்தைப் பொறுத்தவரை அப்படித்தான். ஆனால் நிலச் சுவான்தாரர்கள் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.”

”ஆமாம். சொன்னீர்கள்.”

”சீன விவசாயத்துறை, மிகவும் நன்கு வளர்ந்த இஸ்ரேல் நாட்டு விவசாயத்திற்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல. நவீனங்கள் அனைத்தையும் இங்கே கொண்டு வந்துவிட்டார்கள். இதனால் சிறிய நிலப்பகுதியில்கூட அதிக மகசூல் எடுக்கிறார்கள்.”

”சீனா முழுக்க விவசாயம் இப்படித்தான் ஆரோக்கியமாக நடைபெறுகிறதா, இல்லை.”

”இங்கேதான் நீங்கள் பத்திரிகையாளர் என்பதை நிரூபிக்கிறீர்கள்.”

”மேற்குச் சீனப் பகுதிகளிலெல்லாம் அதாவது இந்திய, ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளை ஒட்டிய விவசாயம் மிக மோசம்.”

”மிக மோசம் என்றா சொல்கிறீர்கள்?”

”ஆமாம். நம் நாட்டு விவசாயமே எவ்வளவோ தேவலை!”

”என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? இவ்வளவு நேரம் அப்படிப் புகழ்ந்தீர்கள்!”

”மத்திய, கிழக்குச் சீனா அளவுக்கு மேற்கத்தியச் சீனா விவசாயத்தில் வளமாக இல்லை என்பதே உண்மை.”

”ஏன் இந்தப் பாகுபாடு?”

”இயற்கை ஒத்துழைக்கவில்லை என்பதோடு வடக்குச் சீன மக்களிடம் ஆளும் அரசு ஏனோ பாரபட்சம் காட்டுகிறது.”

”நம்ப முடியலையே சார்! ஒரு கம்யூனிஸ்ட் நாடா இப்படிப் பாரபட்சமாக நடந்து கொள்கிறது? சரி ஏன் அப்படி?”

”நான் சொல்லமாட்டேன். நீங்களாகக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.”

”அவ்வளவையும் விரிவாகவும் விரல் நுனியிலும் வைத்துப் பேசும் நீங்கள், இந்தக் கேள்விக்கு மட்டும் பூடகமாகப் பதில் சொல்வது ஏன்?”

”வேண்டாம் சார் இந்த விஷயத்தை இதோடு விட்டுடுங்க.”

”அதெல்லாம் முடியாது. தெரிஞ்சே ஆகணும் எனக்கு” சிறுபிள்ளையாய் அடம் பிடித்தேன்.

”இந்தியாவை ஒட்டிய, ஆப்கானிஸ்தானை ஒட்டிய சீனப் பகுதியில் எத்தகைய மக்கள் வசிப்பார்கள் சொல்லுங்கள்?”

”என்ன சார் இது! சீனாவைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இவ்வளவு காலமாக இருந்த இரும்புத் திரை இப்போதுதான் மெல்லமெல்ல விலகுகிறது. எனவே நீங்கதான் சொல்லணும்”என பிடிவாதம் நடக்கவில்லை. இறுதிவரை சொல்ல மறுத்துவிட்டார். ஊகித்து ஊகித்து பல பதில்களை, ஊகங்களைச் சொல்லி, அனைத்தும் தவறாகப் போக இவரெல்லாம் ஒரு பொது அறிவுப் பத்திரிகையின் ஆசிரியர்! என்று செந்திலும் அநேகமாய் முடிவுக்கு வந்திருந்த நேரத்தில், என் கடைசி ஊகத்தைச் சொல்லி வைத்தேன்.

”வடமேற்கு சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் என்பதாலா?.” பொருள் பொதிந்த சிரிப்பு ஒன்றை மட்டுமே உதிர்த்தார் செந்தில் குமார்.

ஆம்! சீன அரசு முஸ்லிம்களைப் புறக்கணிக்கிறது என்பதே செந்திலின் புன்னகையின் பொருள். அதிர்ச்சியாக இல்லை?

(தொடரும்)

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Related Posts Title


Leave a Reply