Friday, 18 Jul 2008
தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?
தமிழக காங்கிரசின் தலைவராக தங்கபாலு நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒரு புதிய தலைமை பொறுப்பு ஏற்கிற போது, பொதுவாகச் சில எதிர்பார்ப்புகள் எழுவது இயல்பு.
இத்தகைய எதிர்பார்ப்பு கட்சித் தலைமை முதல் அரசியல் ஆர்வமுடைய எவருக்குமே இருக்கத்தான் செய்யும்.
தங்கபாலு தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதில் ஒரு கூடுதல் சிறப்பு என்னவென்றால், தமிழக காங்கிரஸ் தலைவர்களிலேயே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் முறையாக நியமிக்கப்பட்டிருப்பதுதான்.
தமிழக காங்கிரஸ் என்றாலே பலருக்கு நினைவிற்கு வருவது, சட்டையைக் கிழித்துக் கொள்ளும் அவலம்தான். ஒரு உட்கட்சிக் கூட்டமாவது அமைதியான முறையில் சிறப்பாக நடந்ததா என்றால், பெரும்பாலும் இல்லை என்று சொல்லிவிடலாம்.
தமிழக காங்கிரசின் பிரதிநிதிகளாக நான்கு மத்திய மந்திரிகள் பதவியில் இருக்கிறார்கள் என்றால், நான்கு பேரும் நான்கு கோஷ்டிகள். அன்னை சோனியா என்று மூச்சிற்கு மூச்சு சொல்லும் இவர்கள் அன்னை சோனியாவின் விருப்பமான ஒன்றுபட்ட காங்கிரசை உருவாக்க எவ்வித முயற்சியும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
நானறிந்தவரை அரசியலில் பதவியில் அமர்ந்திருக்கும்போது எந்த ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களும் கருத்து வேறுபாடுகளை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பதவியை இழந்தபிறகும், மக்கள் பாடம் புகட்டிய பிறகும் உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டாய் என்று சுட்டுவிரல் நீட்டிப் பகிரங்கமாக அடித்துக் கொள்வார்கள்.
திராவிடக் கட்சிகளை ஒப்பிடும்போது காங்கிரஸ் கட்சி அப்படி ஒன்றும் வலுவான கட்டமைப்பைக் கொண்ட கட்சி என்று சொல்லிவிட முடியாது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கூட்டங்களுக்குப் பெருங்கூட்டம் வருவது இல்லை. பார்க்கவே பாவமாக இருக்கும்படியாகத்தான் பல காங்கிரஸ் பொதுக்கூட்டங்கள் நடக்கின்றன. சோனியா போன்றவர்கள் வரும்போதுதான் ‘அடேங்கப்பா’ கூட்டம்.
ஆனால், அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் போதுதான் ஒரு விஷயம் தெளிவாகும். காங்கிரஸ் என்பது தலைவர்களாலோ தொண்டர்களாலோ செலவினங்களாலோ வெற்றி பெறுவது இல்லை. மாறாக, அக்கட்சியின்மீது மக்களின் ஒரு சார்பினருக்கு இருக்கும் மாறாத பழைய நல்ல அபிப்ராயமும் சுதந்திரம் பெற்றுத் தந்த விசுவாசமும் காரணங்கள்.
தொண்டர் உழைப்பும், தேர்தல் செலவுகளும் அதிகம் இன்றி ஒரு கட்சி இன்னமும் எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தாலும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களின் ஓட்டுவங்கி ஆதரிக்கும் என்று இனியும் எதிர்பார்க்க முடியாது.
இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக இன்று விஜயகாந்த் உருவாகி வருவதால், காங்கிரஸ் இனி வரப்போகும் தேர்தல்களில் மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிவரும்.
தங்கபாலு தனக்கென்று உள்ள கூட்டம் போதும்; தலைமையிடத்தின் ஆதரவே பெரும் பலம் என்று கணக்குப் போட்டாரேயானால் அது முற்றிலும் தவறாகிவிடும்.
கோஷ்டி அரசியலை உடைக்கும் அரசியலும், அனைவரையும் அனுசரித்தும் அரவணைத்தும் போகும் மனநிலையும்தான் இனித் தமிழகக் காஙகிரஸைக் கடைத் தேற்றும் செயலாக அமையும்.
இந்தப் பலத்தின் பின்னணியில்தான் இளைஞர்களை ஈர்க்க ஏதேனும் செய்ய முடியும்.
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…
2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!
2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!
2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!
2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!
2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?
2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?
2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!
2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?










































