Thursday, 10 Jul 2008
சீனம் சென்று வந்தேன்
மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
சீனாவில் வந்திறங்கிய கணம் முதல் சற்றும் அகலாது கண்ணின் இமைபோல் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் செந்திலிடம் உங்கள் வேலைகளைக் கெடுக்கிறேனே என்று குற்ற உணர்வாக இருக்கிறது என்று அவரிடமே சொன்னதற்கு ஏன்தான் அப்படிச் சொன்னோமோ என்று ஆக்கிவிட்டார்.
”உங்களின் மகிழ்ச்சிக்காகத்தான் இவ்வளவும். நீங்கள் என்னவென்றால் அதுபற்றி மகிழ்வதைவிட வருத்தமே அதிகம் அடைகிறீர்கள் என்பது எனக்கு ஒரு மாதிரியாக உள்ளது. உங்களைக் குற்றஉணர்வில் தள்ளுவது என் நோக்கமில்லையே! நானும் மகிழ்ச்சியாகத்தானே இதைச் செய்கிறேன்? நீங்கள் சொல்வது எனக்குக் கஷ்டமாக இருக்கிறது” என்றார்.
உடனே நான் அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்க வேண்டியதாகிவிட்டது. எவ்வளவோ உளவியல் தெரிந்தாலும் எங்கேனும் சறுக்கி விழத்தான் செய்கிறேன்.
சீன விவசாயக் களங்களைப் பார்த்த அனுபவம் வித்தியாசமானது.
நெல் பயிரிட்டால் அதில் காய்கறி இராது. காய்கறி பயிரிட்டால் அதில் நெல் இராது. இது தானே நம்மூர் வவசாயம்! சீனாவில் அப்படி இல்லை. நெல்லினை மையமாகப் பயிரிட்டுவிட்டு அதன் ஓரமாக ஓர் ஒழுங்குடன் கூடிய வரப்புப் போன்ற பகுதியில் ஏகமாய்க் காய்கறி வளர்க்கிறார்கள். நெல், காய்கறி எல்லாம் வீட்டுத் தேவைகளுக்குக் கிடைத்த மாதிரி ஆயிற்று.
ஆனால் தாங்கள் விதைத்த நெல்லைத் தாங்களே எடுத்துக்கொள்ள முடியாத நிலையில்தான் சீனர்கள் இருக்கிறார்கள். ஆமாம். முழுநெல்லையும் அரசே எடுத்துக் கொண்டு பணம் தந்துவிடும். தங்களுக்குத் தேவை என்ற கோரிக்கை வைத்தால் குடும்ப உறுப்பினர்களின் தலையை எண்ணிச் சில மூட்டைகள் தருவார்கள்.
விளையும் நெல் முழுவதையும் எடுத்துக் கொள்வதால் அரிசி விலையை அரசுதான் முடிவு செய்கிறது. இதனால் அரிசி விலை சீனாவில் சீராக இருக்கிறது. கமிஷன் கொள்ளைகள்; கொள்ளை இலாபங்கள்; பதுக்கல்கள்; கள்ளச்சந்தைகள் இல்லாத மலிவான விலைக்கு மக்களுக்கு அரிசியைத் தரமுடிகிறது.
காயகறிகளையும் பிடுங்கிக் கொள்வார்களா என்று கேட்கிறீர்களா?
மாட்டார்கள். காய்கறிகளை வெளிச் சந்தைக்குக் கொண்டு வந்து விற்க உரிமை உண்டு.
எடுத்த எடுப்பில் அறுவடை, விலை என்று பேச வந்துவிட்டேனே, இது தவறு, ஆரம்பத்திலிருந்தே சொல்லியாக வேண்டும்.
நெல்விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை அரசே தரும். இதுமட்டுமா? உழவு ஓட்டியும் கொடுக்கும். நாற்று நட இயந்திரம் தரும். களை பறிப்பு, பூச்சி மருந்து தெளிப்பு நில உரிமையாளர்களின் பொறுப்பு. அறுவடைக்கு இயந்திரம் வந்துவிடும்.
நான் பார்த்த விவசாய நிலப்பகுதியில், ஒரு ஜோடி மாடுகளைக் கூட காண முடியவில்லை.
அனைத்து விவசாயப் பிரிவுகளையும் இயந்திரங்களே ஆளுகின்றன. இயந்திரங்கள் என்றால் அப்படி ஓர் நவீனம். நிலத்தை நம்பிக்கொண்டு வருடம் பூராவும் காலம் ஓட்டுகிறவர்கள் அல்லர் சீன விவசாயிகள். இவர்கள் பகுதிநேர விவசாயிகள். ‘என்னது! பகுதி நேர விவசாயிகளா? அப்படீன்னா? என்கிறீர்களா? இந்தியப் பெண்கள் பலர் விடிகாலை முதல் நள்ளிரவு வரை அடுப்படியிலேயே வெகுநேரம் செலவழிப்பார்கள். மேலை நாடுகளில் இப்படி இல்லை. பிரட் கடிப்பு; மதியம் வேலை செய்யுமிடத்தில் உணவு; இரவு ரெஃப்ரெஜிரேட்டரில் சமைத்து வைத்ததை எடுத்துச் சுடவைத்துச் சாப்பிடுவதைப் பழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் அல்லவா?
சீன விவசாயப் பெண்களும் (ஏன், ஆண்களும்தாம்!) விடிகாலையில் எழுந்து வேலைகளைச் செய்துவிட்டு, அலுவலகம் போகிறார்கள். மாலை சீக்கிரமே திரும்பி மறுபடி விவசாயக் களத்தில் வேலை பார்க்கிறார்கள்.
சீனப் பெண்கள் கடுமையான உழைப்பாளிகள். வரப்பில் வேலை செய்வதையும் அலுவலகத்தில் வேலை செய்வதையும் நமக்கு சம்பந்தம் இல்லாதவை என்று எண்ணுவது இல்லை. ”என்னது! வெள்ளைக் காலர் உத்தியோகத்தில் உள்ள என்னைச் சேற்றில் இறங்கச் சொல்கிறாயா? பேனா, கம்ப்யூட்டர் என்று வாழும் என்னை, மண்வெட்டி, கலப்பை என்று கை வைக்கச் சொல்கிறாயா? நான் யார் தெரியுமா? எனக்கென்ன அவசியம் வந்தது?” என்றெல்லாம் வாதம் புரிவதில்லை என்பதுடன், சிந்தித்தும் பார்ப்பது இல்லை.
எந்த வேலையும் இழுக்கல்ல; ஓர் உயர் பதவியில் இருப்பதால் விவசாயம் செய்வது இழுக்குமல்ல என்கிற மனோபாவம் உடையவர்களாக இருக்கிறார்கள்.
முறை வைத்து நீர் பாய்ச்சும் வேலை கூட அரசினுடையது. சொல்லப் போனால் சீன விவசாயிகளுக்கு அவர்களது நிலத்தில் வேலை குறைவு. அந்த அளவிற்கு விவசாயத்தில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதோடு, சிரமங்களையும் ஏகமாகக் குறைத்துவிடுகிறது.
எவ்வளவு பெரிய நிலம் வைத்திருந்தாலும் இயந்திர முதலீடுகள் என்பவை மிகக் குறைவு.
நான் ஏதோ இருபக்கங்களிலும் குடங்களைக் கட்டி மூங்கிலில் இணைத்து இவற்றைக் தோளில் சுமந்துவரும் காட்சியழகைக் காணலாம் என்றால் அப்படி ஒரு விவசாயப் பெண்மணியை நான் காணவே முடியவில்லை.
ஒவ்வொரு தனியார் நிலத்தையும் தங்களது தனிப்பட்ட நிலம்போல் கருதி, பார்த்துக்கொள்ளும் அரசின் பிரதிநிதிகளைக் காணும்போது மிக வியப்பாக இருக்கிறது.
சீனாவில் நான் சென்ற பகுதிகளில் நீர்வளம் மிக அதிகம். இதனால் பஞ்சமில்லாமல் பாய்கிறது.
சீனாவின் மிகப் பெரிய நிலப்பகுதி முழுக்க இப்படித்தானா என்றால், இல்லையில்லை என்பதே பதில்!
தண்ணீர் பாய்ச்சப்படும் நேரம் விடிகாலைதான். முதல்நாளே சிறுசிறு வாய்க்கால்களை அமைத்துக்கொடுத்து அந்தப் பகுதி முழுக்கப் பாய்ச்சி முடித்துவிட்டு அடுத்த பகுதிக்குச் சென்றுவிடுகிறார்கள். தனியார் நிலத்திற்கு ஆலோசனை சொல்ல வருகிற களப் பணியாளர்கள் சிலரே இந்தக் குழப்புக் குழப்பும் போது இவர்களால் மட்டும் எப்படி இவ்வளவு சரியாகச் செயல்பட முடிகிறது.
குழப்பங்களுக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் அதிக இடத்தரவல்ல களங்கள் இவை. ஆனாலும் மிகச் சரியாக இலக்கு நோக்கிச் செயல்படுகிறார்கள்.
இஸ்ரேல் விவசாய முறை இவர்களை மிகவும் ஈர்த்திருக்க வேண்டும். என் நண்பர் ஆர்.எம்.லஷ்மணன் அண்மையில் இஸ்ரேல் போய்விட்டு வந்து சொன்ன பெருந்தன்மையை எண்ணி வியக்கிறேன்! உரப்பிரச்னை இல்லை! அது கிடைக்கலை; இது கிடைக்கலை; இடு பொருள் இல்லை என்கிற பேச்சு இல்லை.
அரசு ஊழியர்களைச் சீன மக்கள் அப்படி மதிக்கிறார்கள். அதிகாரிகளோ, அலுவலர்களோ மக்களுக்கு எப்படி உதவலாம் என்கிற கோணத்திலேயே சிந்திக்கிறார்கள்.
இந்தப் புரிந்துணர்வு சீன விவசாயத்திற்கு நிறையவே கைகொடுக்கிறது.
இப்படிக்கூடச் சாத்தியப்படுமா என்று மூக்கில் விரல் வைக்கிற அளவிற்கு அரசும் தனியாரும் கைகோர்த்து அருமையாக விவசாயம் செய்கிறார்கள். கொள்முதல் செய்தவை அளக்கப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு, மதிப்பிடப்பட்டு, உரியதொகை அந்தந்த விவசாயியின் கணக்கில் கட்டப்படும்.
கரும்பிற்கு ஒரு வருடம் தாண்டியும் பணம் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்களே, இங்கு! இந்த அவலம் சீனாவில் இல்லை.
சில நிலங்களில் நீரிறைப்பு இயந்திரங்களைப் பார்த்தேன். ”இவை அந்தந்த விவசாயிகளுக்குச் சொந்தமாக இருக்குமா?” என்று கேட்டேன்.
”அட இல்லீங்க! இவையும் அரசு இலவசமாகத் தந்தவைதான்” என்றார் செந்தில்.
”அது சரி!” என்றேன்! நம்ம இலவசங்களெல்லாம் என்ன செய்ய?
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…









































