Thursday, 10 Jul 2008
புண் புரையோடும் முன்னதாக….
சென்னை நகரம் ஒரு பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருகிறதோ என்கிற பயம் எழுந்துள்ளது.
இல்லாத ஒன்றை எழுதி, மிகைப்படுத்தி படிக்கும் எவரையும் கலவரப்படுத்துவது என் நோக்கமல்ல. நடப்பதை அக்கறையுடன் குறிப்பிடுகிறேன். கடந்த மாதம் மட்டும் 30 கொலைகள் சென்னையில் நிகழ்ந்துள்ளன.
30 கொலைகளின் தன்மைகளையும் சற்று அலசிப் பார்த்தால் பொருள் நோக்கத்தைவிடப் பழிவாங்கும் நோக்கமே அதிகமாகத் தெரிகிறது. சமூக விரோதிகள் ஒருவரையொருவர் பழிவாங்கிக் கொள்ளுதல் என்பவை தனியே நடக்க, கர்ப்பிணிப் பெண்ணும் சிறுவனும்கூடக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களைவிடப் பல கொலைகள் கைக்கூலிகளால் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
எம்.ஜி.ஆரின் மைத்துனியின் மாப்பிள்ளை விஜயனும் கூடக் கூலிப்படையால் கொல்லப்பட்டிருக்கிறார். ஒரு பிச்சைக்காரர்கூடக் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.
ஆக ஒரு மேட்டுக்குடி மகனிலிருந்து சாமானியனுக்கும் கீழான ஒருவர்கூடப் பழிவாங்கும் படலத்திற்கு உயிரைப் பறி கொடுத்திருக்கிறார்கள். சமூக விரோதிகளே கையில் சட்டத்தை எடுத்துக் கொள்ள என்ன காரணம்?
புதுப்பேட்டை மகி 2004ஆம் ஆண்டு ஆறு பேரால் சூழ்ந்து நடுச்சாலையில் பட்டப்பகலில் வெட்டப்பட்டார். இந்த ஆறு பேரும் இப்போது விடுதலையாகிவிட்டார்கள்.
என் கேள்வியையும் இந்த புதுப்பேட்டைச் செய்தியும் உங்களால் சம்பந்தப்படுத்திக் கொள்ள முடியும் என நம்புகிறேன்.
அதாவது, குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டிப்பதற்குள் பெரிய பெரிய ஓட்டைகள் நிகழ்ந்துவிடுகின்றன.
எனவே ஒருவேளை சட்டம் தண்டிக்காதோ இவர்களை என்கிற ஐயப்பாடு பலருக்கு வந்துவிடுகிறது. இன்னும் சிலரோ சட்டத் தீர்வு இதற்குச் சரியான வழியல்ல என்று நம்புவதால்தான் கூலிப்படையினரை அமர்த்துமளவிற்கு வெறி கொள்கிறார்கள்.
தமிழகக் காவல்துறைக்கு உலக அளவில் நல்ல பெயர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த 30 கொலைகளுள் பலவற்றிற்கான குற்றவாளிகள் இன்னும் சிக்கவில்லை.
நீதித்துறையோ நேர்மையானவர்கள் எங்கே எங்கே என்று கேட்க வைக்கிறது.
இந்த நிலைமைதான பலரைச் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளச் செய்கிறது என்று தோன்றுகிறது.
சட்டத்தையும் காவல்துறையையும் நம்ப வைக்க, இவற்றின் வழியே சிந்திக்க வைக்க ஏதும் செய்தாக வேண்டும்.
இந்தச் சமுதாயப் புண் புரையோடிப் போகுமுன் கிள்ளியெறிந்தாக வேண்டிய அவசியம் உடனே ஏற்பட்டிருக்கிறது.
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!
2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!
2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!
2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!
2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?
2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?
2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!
2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?









































