Friday, 4 Jul 2008
அப்துல் கலாம் அறிவுரை!: மூன்றாவது அணிக்கு முலாயம் டாடா, மத்திய அரசுக்கு ஆதரவு!
புதுடெல்லி: அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்க சமாஜ்வாடி கட்சி ஒப்புதல் தெரிவித்திருப்பதால் மத்திய அரசுக்கு இருந்த நெருக்கடி தீர்ந்துவிட்டது.
அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து குடைபிடிக்கும் இடதுசாரிகள் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெற்றுவிடுவார்கள் என்ற சூழலில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவை மத்திய அரசு பெற்றுவிடலாம் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தது. அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. மத்திய அரசை காப்பாற்ற தயாராகிவிட்டார் முலாயம் சிங்.
மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கவேண்டிய சூழ்நிலையில், தான் அங்கம் வகிக்கும் மூன்றாவது அணிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் முலாயம் சிங்.
அணுசக்தி ஒப்பந்தை அவர் ஒப்புக்கொண்டதற்கும், மத்திய அரசுக்கு ஆதரவு கரம் நீட்டுவதிலும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இருப்பதாக தகவல்.
நேற்று பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியாவை சந்திப்பதற்கு முன்பாக அவர் அப்துல்கலாமுடன் பேசியதாகவும், அப்துல்கலாமின் அறிவுரையின்படியே அவர் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
அணுசக்தி ஒப்பந்தத்தை, நாட்டு நலன் கருதி, அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆதரிக்க வேண்டும் என அப்துல்கலாம் கூறிய யோசனையை முலாயம் சிங் யாதவ் ஏற்றுக் கொண்டார். இன் 39 எம்.பி.க்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நேரில் சென்று, மத்திய அரசுக்கான ஆதரவு கடிதத்தைக் கொடுக்கிறார்.
எந்த ஒரு நாடும், இன்னொரு நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டால், அதற்கு சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் முன் அனுமதி தேவை. அணுசக்தி உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள், அறிவியல் தொழில் நுட்பங்கள், எந்திரங்கள், நிதி மற்றும் பிற உதவிகளை பெற இந்த அனுமதி தேவை.
இந்த உதவிகளை பெற வேண்டுமானால், அணுஆலைத் தொடங்குவதற்கு முன்னர் அதுபற்றிய விவரங்களை சர்வதேச அணுசக்தி ஏஜென்சிக்கு தெரிவித்து, அதனுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்படித்தான், ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கும், சர்வதேச அணுசக்தி கழகத்திடமிருந்து இந்தியா முன் அனுமதி பெற்றுள்ளது. அதைப்போன்று தான் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படவிருக்கிற அணுசக்தி ஒப்பந்தத்திற்கும், இந்த சர்வதேச அணுசக்தி ஏஜென்சியிடம் முன் அனுமதி பெற மத்திய அரசு முயன்று வருகின்றது.
குறிப்பாக முலாயம் சிங் யாதவின் ஆதரவு மிக முக்கியம் என்பதால், சோனியா காந்தியே அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன் பிறகு 2 முறை நேரில் சந்தித்தும், பேசியுள்ளார். இதையடுத்தே முலாயம் சிங் யாதவ், மத்திய அரசை ஆதரிக்க முன்வந்தார். இருந்தாலும் அவர் இறுதி முடிவை ஜூலை 3-ந் தேதி அறிவிப்பதாகக் கூறியிருந்தார்.
ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி தலைவர்களின் கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது.
அக்கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய முலாயம் சிங் கூறுகையில், ”அப்துல்கலாமின் யோசனையைக் கேட்ட பின்னர் முடிவு எடுப்பேன். அணு ஒப்பந்தத்தை விட மதவாத ஆபத்து தான் பெரியது. இந்த கருத்தை நான் அன்றும் கூறினேன், இன்றும் கூறுகிறேன்” என்று குறிப்பிட்டார்.
ஆகவே அவர் மத்திய அரசை ஆதரிப்பது அப்போதே உறுதியாகிவிட்டது. ஏனென்றால் இந்த அணு ஒப்பந்தம் நாட்டிற்கு மிக நல்லது என்று அப்துல்கலாம் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறார். நேற்று அவரது வீட்டிற்கு முலாயம் சிங் யாதவும், அவரது கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங்கும், நேரில் சென்று சந்தித்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடந்தது.
அப்போது அப்துல்கலாம் பல யோசனைகளைத் தெரிவித்துள்ளார். அரசியலையும், அரசியல் கட்சிகளையும் விட நாட்டு நலன் தான் முக்கியம் என்றும், ஆகவே இந்த ஒப்பந்தத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டுமென்றும், அறிவுரை வழங்கியுள்ளார். அண்டை நாடுகளான பாகிஸ்தானும், சீனாவும் அணுகுண்டு தயாரிக்கத் தொடங்கினால், நாமும் கூடுதலாக அணுகுண்டு தயாரிக்கும் பொருட்டு இந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளலாம் என்றும், அவர் கூறியுள்ளார்.
இதைத்தவிர இந்தியாவில் கிடைக்கும் தோரியத்தின் மூலம் எரிசக்தியை உருவாக்கும் தொழில் நுட்பத்தை கண்டறிய இன்னும் 15 அல்லது 20 ஆண்டுகள் ஆகும் என்பதையும் அப்துல் கலாம் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது அறிவுரைகளை முலாயம் சிங் யாதவ் ஏற்றுக் கொண்டுவிட்டார்.
இன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்திக்கிறார். அப்போது, அவரது கட்சியைச் சேர்ந்த 39 எம்.பி.க்களை அழைத்துக் கொண்டு, மத்திய அரசுக்கான ஆதரவுக் கடிதத்தைக் கொடுக்கிறார்.










































